இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி கால்களை இழுத்து இழுத்து நகர்பவர்களே தவழும் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். பெற்றோர்களுக்கு பிறகு தவழும் மாற்றுத்திறனாளிகளை பார்த்துக்கொள்ளவும், பராமரித்துகொள்ளவும் யாருமின்றி, வாழ்க்கையில் தத்தளிக்கும் கடுமையான சூழல் ஏற்படுகிறது. அவர்களின் பெற்றோர்கள் மரண தருவாயில் கூட தன்னுடைய பிள்ளையை எங்களுக்கு பின் கவனித்து கொள்ள யாருமில்லையே என்ற ஏக்கத்திலேயே பெற்றோர்களின் மரணம் கூட நிம்மதியற்ற ஆன்மாவாக செல்கிறது. குறிப்பாக பெண் தவழும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை அவர்களின் பெற்றோர்களுக்கு பிறகு கேள்விக்குறியாகின்றது.
இந்த அவல நிலையை போக்கவும், தவழும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் ஒரு அங்கமாக பிரதிபலிக்கவும், வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பாகும். தவழும் மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றுத்திறனாளிகளால் ஆரம்பிக்கப்பட்ட இல்லமே சிவகங்கையில் அமைந்திருக்கும் நமது தாய் இல்லம் ஆகும். தாய் இல்லமானது சமூகத்தால் கைவிடப்பட்ட, பெற்றோர்களை இழந்த, பெற்றோர்களால் பராமரிக்க முடியாத தவழும் ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து , உணவு, உடை, பராமரிப்பு கொடுத்து, தாய் இல்லமானது வாழ்நாள் முழுவதும் தங்கும் வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி கூடமாக செயல்பட்டுவருகிறது.
தாய் இல்லத்தில் தற்போது 43 மாற்றுத்திறனாளிகள் தங்கி பயனடைந்து வருகின்றனர். கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வரும் தாய் இல்லம் 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வையும், அரசின் சலுகைகளையும், அரசின் திட்டங்களையும் எடுத்து கூறி சேவை புரிந்துள்ளது. தாய் இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அவரவர்களால் முடிந்த தொழிற்பயிற்சிகளையும், வேலைகளையும் கற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.